நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பருத்தி சீசனில் வியாபாரிகளிடமிருந்து பருத்தி ஏலம் விடுவது வழக்கம்.
ஆனால் கரோனா பாதிப்பால் இந்த ஆண்டு விவசாய விளைப்பொருள்கள் விற்பனை செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து, பயிறு வகைகளை விற்பனை செய்வதற்கு அறிவுறுத்தியது.
இதற்கிடையில் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து, பயிறு வகைகளின் மறைமுக ஏல விற்பனை நடைபெற்றது. ஒழுங்குமுறை விற்பனைக் கூட நாகை மாவட்ட விற்பனைக் குழு செயலாளர் வித்யா முன்னிலையில் இது நடந்தது.
இதில் தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர்.
தற்போது நடந்த ஏல விற்பனையில் பயிறு 120 குவிண்டாலும், உளுந்து ஒரு குவிண்டாலும் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் ஏலம் முறையில் கொள்முதல் செய்தனர். பயிறு ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 879 ரூபாயும், குறைந்தபட்சமாக 7ஆயிரத்து 200 ரூபாய் வரையிலும், உளுந்தை 8,400 ரூபாய்க்கும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
இதையும் படிங்க... கரோனாவால் பாதித்த பருத்தி விற்பனை: விவசாயிகள் கவலை