நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், சில மாநிலங்களிலும் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், மத்திய அரசின் மக்களுக்கு அரிசி வழங்குவதற்குப் பதில் பணம் வழங்கும் திட்டத்தை புதுச்சேரியில் மாநில அரசு அமல்படுத்தியது.
இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகள் இயங்காத நிலை உருவானது. இதனால் ரேஷன் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கடந்த 38 மாதங்களாக அதாவது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வருமானமின்றி வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ரேஷன் கடைகளில் பணிபுரியும் தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மாற்று வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ( நவ. 05) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, ஊழியர்கள் 50க்கும் மேற்பட்ட ரேஷன் ஊழியர்கள் தங்களது ஆதார் அட்டை , குடும்ப அட்டை , வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

புதுச்சேரி அரசுக்கு எதிராகவும், ஊதியம் வழங்கக் கோரியும், மாற்று வேலை வழங்கக்கோரியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷன்க்களை எழுப்பினார்கள். அப்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகளால் பலதரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். வேலைவாய்ப்பு, வருமானம் இல்லாத நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் பலர் திருடர்களாகவும், பிச்சைக்காரர்களாகவும் குடும்பம் நடத்த முடியாதவர்களாக மாறியுள்ளனர். மக்களை குடிகாரர்களாக மாற்றியதுதான் கிரண்பேடி, புதுச்சேரி மாநிலத்திற்காக செய்த வேலை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
தங்களுக்கு ஊதியம் வழங்குவதுடன் மாற்று வேலை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் கோரிக்கை விடுத்த அவர்கள், இவை நடைபெறாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்தனர்.
இதையும் படிங்க:மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான் - அமைச்சர் செல்லூர் ராஜு