மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா விசலூர் ஊராட்சியில் உள்ள பத்தம், விசலூர், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் 478 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இங்கு கடந்த 30 ஆண்டுகளாக பொதுவிநியோக கடை சேந்தமங்கலம் கிராமத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கியது.
இந்நிலையில் விசலூர் ஊராட்சி கிராம மக்கள் நீண்டநாள் கோரிக்கை ஏற்று 2019-2020ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விசலூர் கிராமத்தில் பொதுவிநியோக கட்டடம் கட்டப்பட்டது.
பொதுவிநியோக கடை மீண்டும் மாற்றம்
இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டு பொருள்கள் வழங்கப்படன. இதற்கு சேந்தமங்கலம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் ஏற்கனவே இயங்கிய வாடகை கட்டத்திற்கு பொதுவிநியோக கடை மீண்டும் மாற்றப்பட்டது.
மேலும் விசலூர், பத்தம் கிராமத்தில் ஆதிதிராவிட சமுதாயத்தினர் அதிகமாக உள்ளதாலும் சேந்தமங்கலம் கிராமத்தில் மாற்று சமுதாயத்தினர் இருப்பதாலும், சாதியை காரணம் காட்டி பொதுவிநியோக கடை மீண்டும் வாடகை கட்டடத்திற்கு சென்றதாகவும், குறைவான குடும்ப அட்டைதாரர்கள் உள்ள இடத்திற்கு கடை சென்றுள்ளது என பத்தம், விசலூர் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
புதிய கட்டடம் இருக்கும்போது வாடகை கட்டடத்தில் ஏன் இயங்கவேண்டும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் விசலூர் கிராமத்தில் கட்டப்பட்டு பூட்டி கிடக்கும் பொதுவிநியோக கடையை திறந்து பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லையெனில் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு கூறுகையில்
”சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டடம் கூட்டுறவு துறையில் ஒப்படைக்கப்படவில்லை. அங்காடி தங்கள் பகுதியில் இருக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் பிரச்னை உள்ளதால் வருவாய் அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:
அமமுக மகளிரணி பிரமுகர் வீட்டில் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கல்!