நாகை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதியில் திருநெல்வேலியில் நடைபெறும் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து ஜனவரி மாதத்தில் தேர்தல் நிலைப்பாட்டினை அறிவிப்போம்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாக அரசியலுக்கு வருவதாகக் கூறி வருவதை அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது அரசியலுக்கு வருவதை தள்ளிப் போட கரோனா வைரஸை காரணம் காட்டுகிறார். அவரது அரசியல் பிரவேசம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆன்மீகவாதியாகவும், தனிமை விரும்பியாகவும் உள்ள ரஜினிகாந்த் அரசியலில் தாக்குபிடிக்க முடியாது.
இந்தச் சந்தர்ப்பத்தையும் ரஜினி நழுவவிட்டால் இனி அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புக்கு பயந்தே தமிழ்நாடு ஆளுநர், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார்.
இதற்காகத் துணிச்சலாக அரசாணை வெளியிட தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டுக்கள். மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தர மறுப்பது கண்டனத்துக்குரியது. தீபாவளியை ஒட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் அரசு ரூ. 5,000 வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அரசியலுக்குள் வா தலைவா...! - ரஜினிக்கு அஞ்சல் அட்டையில் அழைப்பு கொடுக்கும் ரசிகர்கள்