நாகை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை சார்பில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 82 குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆறுகளில் தூர்வாருதல், மதகுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் விவசாய சங்கங்களின் சார்பில் நடைபெற்றுவருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தப் பணிகள் அனைத்தும் ஆளும்கட்சியினர் போலியான விவசாய சங்கங்களின் பெயரில் மேற்கொண்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தப் பணிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் பாலாஜி நேற்று நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே உள்ள சேமங்கலம் அய்யாவையனாற்றில் தூர்வாரப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
அப்போது, ஆற்றை தூர்வாரியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய பாலாஜி, 100 மீட்டர் அளவிற்கு தூர்வாரியிருந்தால், அதில் கிடைக்கும் மண்ணை ஐந்து லாரிகளில் அப்புறப்படுத்தப்படும் என்று திட்ட மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர், தூர்வாரிய இடத்தில் ஐந்து லாரி மணல் எங்கே? அப்படி என்றால் திட்டமதிப்பீடு தவறா? என்று அலுவலர்களிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் அலுவலர்கள் மூவரும் திருதிருவென முழித்தக் காட்சி பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.