நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சின்னக் கடைத் தெருவில், 1951ஆம் ஆண்டு இலவச மகப்பேறு மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை மூலம் மயிலாடுதுறை நகர்ப்புறம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களான மணக்குடி, மன்னம்பந்தல், மூங்கில் தோட்டம், வடகரை, இளையாளூர், கழனிவாசல், நல்லத்துக்குடி, செருதியூர், கோடங்குடி, உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுகின்றனர்.
சிறப்பாக செயல்பட்டுவந்த இந்த மகப்பேறு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பின்றி பழுதடைந்ததால் கட்டடம் மூடப்பட்டது. அந்த மருத்துவமனையை புதுப்பித்து மீண்டும் மருத்துவ சேவையை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில், நுண்ணுயிரி கிடங்கு (குப்பை கிடங்கு) அமைப்பதற்கான கட்டுமான பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், செயல்பட்டுவந்த மகப்பேறு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டாமல் மருத்துவமனை வளாகத்தில் குப்பை கிடங்கு அமைத்ததால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.