நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தென்பாதி உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மற்றும் மீன்வளத் துறையினரால் மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. மிகவும் முக்கியமான இந்த பகுதியில், கோயில்களின் திருவிழாக்கள், இந்து சமய நிகழ்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இங்கு மீன் மார்க்கெட் கட்டப்பட்டால் மீன் கழிவுகளால் சுகாதாரம் சீர்கெட்டு நோய் தொற்று ஏற்படும். வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, பராம்பரிய விழாக்கள், வழிபாடு, போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றிற்கு பிரச்னைகள் உருவாகாமல் இருக்க மீன் மார்க்கெட் கட்டப்படுவதை கைவிட வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால் அரசின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டுச் செல்லும் வகையில் நகராட்சி அலுவலகம் முன்பு மீன் விற்கும் போராட்டம் நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர். அலுவலர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீன் விற்கும் போராட்டம் மாற்றப்பட்டு மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.