மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர் புகார்கள் சென்றன. இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் அண்ணாமலை தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மயிலாடுதுறை கடைவீதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், மூன்று கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், கப், நான்-ஓவன் பை ஆகியன பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டன. இதையடுத்து, 120 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.