யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதனை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதற்கிடையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி காரைக்கால் மாவட்டத்தில் பணிபுரியும் மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இன்று காரைக்காலில் அமைந்துள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும், தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை எனில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.