நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்காக நீடுர் முஸ்லிம் ஜமாத்தார்கள் அரபிக்கல்லூரி இடத்தை தானமாக அளிக்க மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் கடிதம் அளித்துள்ளனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் இரண்டு மாதங்களுக்கு முன்பே மருத்துவக்கல்லூரியை நாகை அருகே ஒரத்தூரில் அமைக்க முடிவுசெய்து, அதற்குரிய நிலத்தை கண்டறிந்து (லேண்ட் அவெய்லபிளிட்டி சர்டிபிகேட்) தலைமை செயலருக்கு அனுப்பியுள்ளது.
நாகைக்கு மிக அருகில் சுமார் 20 கி.மீ தொலைவுக்குள்ளாகவே திருவாரூர் மற்றும் காரைக்காலில் இரண்டு மருத்துவக்கல்லூரிகள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. ஆனால் மயிலாடுதுறை கோட்ட மக்கள் சுமார் 50 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்தே மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மீண்டும் நாகையிலேயே புதிதாக மருத்துவக்கல்லூரி அமைந்தால் மூன்று மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் மயிலாடுதுறை பகுதியில் மருத்தவக்கல்லூரியை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக, மயிலாடுதுறை கோட்டத்தில் நேற்று கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரியை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ், தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்எல்ஏ பாரதி ஆகியோரை தமிழ்நாடு முதல்வரைச் சந்திக்கவிடாமல், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்நிலையில், முதலமைச்சரைச் சந்தித்து மருத்துவக்கல்லூரி கோரிக்கையை வலியுறுத்தி பேசிய பவுன்ராஜ் எம்எல்ஏவைப் பாராட்டி மயிலாடுதுறை பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், மயிலாடுதுறைப் பகுதியில் மருத்துவக்கல்லூரியை அமைக்க மாவட்ட அமைச்சர் தடையாக இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பரப்பும் மீம்ஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பூம்புகார் எம்.எல்ஏவுடன் மயிலாடுதுறை, சீர்காழி எம்.எல்ஏக்கள் சேர்ந்து மயிலாடுதறையில் மருத்தவக்கல்லூரி அமைக்க முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்’ - அமைச்சர் பாண்டியராஜன்!