பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஜன. 29) மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டலத் தலைவர் அமீர் பாஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த அமைப்பினர் பிப்ரவரி 17ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் நாளாக நாடு முழுவதும் கொண்டாடிவருகின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவந்த பல்வேறு மாநில இயக்கங்கள் ஒன்றிணைந்து ஒரே குடையின்கீழ் இணைந்த நாளான பிப்ரவரி 17ஐ பாப்புலர் ஃப்ரண்ட் நாள் என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினத்தில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி, மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள், ஒற்றுமை அணிவகுப்பு, பேரணி ஆகியவற்றை நடத்திவருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதியை மயிலாடுதுறையில் ஒற்றுமை அணிவகுப்பினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சர்வாதிகாரம் அடிப்படையில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும்விதமாக பாஜக செயல்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது மயிலாடுதுறை பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் முஹம்மது சலீம், மாவட்டச் செயலாளர் நவாஸ்கான், நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் முஹம்மது ரபீக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.