மயிலாடுதுறை: மாண்டஸ் புயல் (Mandous Cyclone) காரணமாக, மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், 16 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் ரூ.148 கோடியில் முறையின்றி அமைக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் நிறுத்தும் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அந்த வகையில், மாண்டஸ் புயலின் தாக்கத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் படகுகள் சேதமடைந்தன. இத்தகைய சூழ்நிலைகளில் இப்பாதிப்பை தவிர்க்கும் விதமாக, தூண்டில் வளைவு அமைக்க அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பூம்புகாரில் ரூ.148 கோடி மதிப்பில் அமைத்த மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக அமைக்கப்படாததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் கடல் சீற்றத்தால் அலைகள் மீன்பிடி துறைமுகத்தை நேரடியாக தாக்கி வந்ததால் அங்கு படகு தளத்தில் படகுகளை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இரவில் தங்களின் படகுகளை பாதுகாக்க மீனவர்கள் தங்களின் படகுகளிலேயே தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, பூம்புகார் துறைமுகத்தில் (Poompuhar port) தூண்டில் வளைவு அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென பூம்புகார் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Mandous Cyclone: சிக்கிய மாற்றுத்திறனாளி - மீட்ட சென்னை போலீசாருக்கு குவியும் பாராட்டு