மயிலாடுதுறை: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த மே 24ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான யாகசாலை அமைக்க கடந்த மே மாதம் 16ஆம் தேதி மண் எடுப்பதற்காக குழி தோண்டிய போது 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த 23 ஐம்பொன் சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் 413 முழுமையான தேவார பதிகம் பதித்த செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இக்கோயிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் ஸ்தல வரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, சட்டைநாதர் சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர், உமாமகேஸ்வரி அம்மன், சட்டநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர், திருநிலைநாயகி அம்மன் சுவாமி சந்நிதிகளில் பொன்.மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர், சட்டநாதர் கோயில் வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கண்டெடுக்கப்பட்ட 23 சுவாமி ஐம்பொன் திருமேனிகள், தேவார பதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவற்றை பொன்.மாணிக்கவேல் பார்வையிட்டு சாமி திருமேனிகளின் காலம் மற்றும் அதன் வரலாறு ஆகியவை குறித்து கோயில் கணக்கர் செந்திலிடம் கலந்துரையாடினார்.
சிலைகளை அரசு கையப்படுத்தக் கூடாது: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீர்காழி சட்டைநாதர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட திருமேனிகள் (தெய்வ விக்கிரகங்கள்) சட்டை நாதர் கோயிலில்தான் வைக்க வேண்டும். இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது.
பூமிக்கு அடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும். தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. அப்படி கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஒற்றுமையுடன் அரசை எதிர்த்து போராட வேண்டும்.
தமிழகத்தில் 1975ஆம் ஆண்டுக்குப் பின்னர் 38 ஆயிரம் கோயில்கள் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன. இதனால், இந்து மதம் மற்றும் ஆன்மீகம் அழிந்து வருகிறது. ஆட்சியாளர்கள் இந்து கோயிலுக்குள் வருவதில்லை. ஆனால், இந்து கோயில்களின் சொத்துக்களை ஆள நினைப்பது தவறு. இதேபோல், சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் உள்ளிட்ட பல்வேறுகோயில்களில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சிலைகளை கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மீட்க இந்துக்கள் முன்வர வேண்டும். இது தொடர்பாக நான் வழக்கு தொடர உள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள்.. சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!