நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாடல்பெற்ற மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, மயூரநாதசுவாமி மற்றும் அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது.
கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் அளித்த 108லிட்டர் நெய்யினை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து மஹாதீபாராதனை நடைபெற்று பின்னர் அபிஷேகம் செய்யப்பட்ட நெய், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதேபோல் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகவும், அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சியளித்த பெருமைக்குரிய கோயிலான வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் தை முதல் நாளை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.
காலபைரவர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள வேதாமிர்த ஏரி என்னும் மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் அசுர தேவர் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக குழந்தைகள் திருவாசகம் பாடி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில், வேதாரண்ய சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.
தஞ்சை
108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேசம் என போற்றப்படும் சாரதாமணி திருக்கோயில் திருவிழா கடந்த 7ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஒன்பதாம் நாளான இன்று தை தேரோாட்டம் நடைபெற்றது.
தேரில் சாரங்கராஜா ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இதையும் படிங்க: 'தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் மரபுப்படி நடத்த வேண்டும்
'