மயிலாடுதுறை: காரைமேடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அந்தோணி செல்வம்-புவனேஸ்வரி. அந்தோணி செல்வம் கூலி வேலை செய்துவருகிறார். அவரது மனைவி புவனேஸ்வரி, தென்னலக்குடி கிராமத்தில் சாலையோரம் தர்பூசணி விற்பனை செய்துவருகிறார்.
கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கணவன் மனைவி இருவரும், தர்பூசணியை விவசாயிகளிடமிருந்து மொத்தமாக வாங்கி சாலையோரம் சில்லறை விற்பனை செய்துவந்தனர்.
இந்த நிலையில் வைத்தீஸ்வரன் கோயில் காவலர், சாலையோரம் விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்து, அந்தோணி செல்வம், அவரது தாய், மனைவி புவனேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களது விற்பனையை முடக்கினர்.
இதனையடுத்து குடும்பத்தை காப்பற்றவும், இரு குழந்தைகளின் பசியை ஆற்றவும் விவசாயிகளிடம் கொள்முதல்செய்த தர்பூசணியை வாடகை வாகனத்தின் மூலம் எடுத்துச்சென்று கிராமப் பகுதிகளில் விற்பனை செய்துவந்தனர். பின் எஞ்சிய பழங்கள் வழக்கமான விற்பனை செய்யும் இடத்தில் வைத்து மூடி பாதுகாத்தனர்.
அப்போது அங்கு வந்த வைத்தீஸ்வரன் கோயில் காவலர் மீண்டும் விற்பனை செய்கிறாயா என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதுடன் விற்பனைக்கு வைத்திருந்த பழங்களை வெட்டி சாலையோரம் வீசியுள்ளனர். பழம் விற்றால் மட்டுமே குடும்பத்தினர் உயிர் வாழ முடியும் என்று புவனேஸ்வரி கூறினார். ஆனால் அதற்குச் செவிசாய்க்காத காவலர், அவர்களைத் தரக்குறைவாகப் பேசி பழங்களை வெட்டி எறிந்தார்.
இதே நிலை நீடித்தால் தாங்கள் வாழ முடியாது என வேதனை தெரிவித்த புவனேஸ்வரி காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார். கரோனா தொற்று காலத்தில் காவலர்கள் எவ்வளவோ நற்செயல்களையும், உதவிகளையும் செய்துவரும் நிலையில், வைத்தீஸ்வரன்கோயில் காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: '9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்!