மயிலாடுதுறை: நடிகர் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தத் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்தின் பெயராக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் குலத்தின் அடையாளமான அக்னிகுண்டம் காட்டப்பட்டுள்ளதாகவும் பாமகவினரும் வன்னியர் சங்கத்தினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
மேலும், இத்திரைப்படம் சாதி - மோதல்களைத் தூண்டும் வகையில் அமைத்துள்ளதாகக் கூறி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பாமகவினர் கடந்த 14ஆம் தேதி திரைப்பட நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் புகார் மனு அளித்தனர்.
சூர்யாவை மிரட்டியவர் மீது வழக்கு
இந்நிலையில், மயிலாடுதுறை திரையரங்கில் சூர்யா நடித்த பழைய திரைப்படமான 'வேல்' திரைப்படத்தின் காட்சிகளை நிறுத்தி பாமகவினரும் வன்னியர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாமக மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, நடிகர் சூர்யா மயிலாடுதுறை வந்தால் அவரை முதலாவதாக தாக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இன்று (நவ.17) மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையைத் தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சூர்யாவின் படம் தியேட்டர்களில் திரையிட்டால் கொளுத்துவோம் - காடுவெட்டி குரு மருமகன் எச்சரிக்கை