புதுச்சேரி மாநிலம் காரைக்காலிருந்து அதிகளவில் நாகை மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருகிறதாகத் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து, நேற்று இரவு சோதனைச் சாவடியில் பொறையார் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவலர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்து காரை விரட்டிச் சென்றனர்.
சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன், காவலர் தமிழ்ஒலி ஆகிய இருவரும் காரை விடாமல் துரத்தி, பொறையார் ராஜூபுரத்தில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் சோதனையில், காரில் 16 அட்டைப் பெட்டிகள் மற்றும் 6 சாக்கு மூட்டைகளில் 2000 குவார்ட்டர் அளவிலான மது பாட்டில்கள், 110 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரையும் மது பாட்டில்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த கலியபெருமாள் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நடத்திய விசாரணையில், காரைக்காலிருந்து சீர்காழிக்கு விற்பனைக்காகக் கடத்திச் சென்றதும், சீர்காழியைச் சேர்ந்த சாராய வியாபாரி ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான காரில் கடத்தியதும் தெரிய வந்தது. தற்போது, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான ரமேஷை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு