நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த வில்லியணல்லூரைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. தொண்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரியில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் தலைஞாயிறு ஓரடியம்புலத்தைச் சேர்ந்த விவேக் ரவிராஜ் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததன் விளைவாக சுபஸ்ரீ கர்ப்பம் தரித்துள்ளார். இதனை சுபஸ்ரீ காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜிடம் கூறவே, விவேக் ரவிராஜுக்கு ஒரு கட்டத்தில் தூக்கி வாரி போட்டுள்ளது.
இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எண்ணிய விவேக் ரவிராஜ் , சுபஸ்ரீயிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துகொள்வோம் என்றும், அதனால் கருவை கலைத்து விடுமாறும் வற்புறுத்தி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு மருத்துவர் மூலம் கருக்கலைப்பும் செய்துள்ளார். நாளடைவில் சுபஸ்ரீயிடம் பேசுவதை விவேக் ரவிராஜ் தவிர்க்கவே சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு, மறுப்பு தெரிவித்த அவர், வெளியில் கூறினால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொன்று புதைத்து விடுவேன் என்றும், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் திருமணம் செய்து கொள்ளும்படி கதறி அழும் அந்தப்பெண்ணை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டல் விடுக்கும் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயந்துபோன அந்த இளம்பெண் சுபஸ்ரீ நாகை, சென்னை ஆகிய காவல் துறை அலுவலகங்களில் தன்னை கர்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்த திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே தனது செல்வாக்கை பயன்படுத்திய விவேக் ரவிராஜ் ஆளுங்கட்சி அமைச்சர் பெயரை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், மயிலாடுதுறை அரசியல் வட்டாரங்களில் உள்ள முக்கிய புள்ளிகள் மற்றும் ரவுடிகளை சுபஸ்ரீ வீட்டிற்கு அனுப்பிவைத்து கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்து வருவதாக பாதிக்கபட்ட பெண் கூறியுள்ளார். இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியது, சட்டத்திற்கு விரோதமாக கருவை கலைத்தது, கொலை மிரட்டல் விடுத்தது என அத்தனைக்கும் ஆடியோ ஆதாரங்கள் வெளியான போதிலும் உதவி ஆய்வாளர் மீது காவல்துறையினர் துறை ரீதியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திருமணம் செய்து கொள்வதாக நெருங்கிப் பழகி ஏமாற்றிய வாலிபர், இளம்பெண் தீக்குளிக்க முயற்சி