மயிலாடுதுறை மாவட்டம் அருகே நீடூர் கிராமத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே கடந்த 25ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி விஏஓ குமாரவேல் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அடையாளம் தெரியாத இளம்பெண் குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் நீடுர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, இறந்து கிடந்த இளம்பெண், ஆண் ஒருவருடன் செல்வது தெரியவந்தது. அதனடிப்படையில் கேமரா பதிவில் இருந்த நீடூர் பி.எம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான நாகராஜன் மகன் ஐயப்பன்(27) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த இளம்பெண் 17 வயது சிறுமி என்பதும் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
திருமணமான ஐய்யப்பன் மனைவி ராதிகா நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் மூன்றே கால் வயது மகனுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தபோது மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி வந்தது தெரிய வந்தது. 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு திருப்பூரில் வேலை பார்த்து வந்த சிறுமி சமீபத்தில் ஊருக்கு வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனை வற்புறுத்தியுள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி இருவரும் இரவு நீடூர் ரயில்வே தண்டவாளம் அருகே சந்தித்துப் பேசியுள்ளனர். மகனை விடுதியில் சேர்த்து விட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஐயப்பனை வற்புறுத்தி ரயில்வே தண்டவாளத்தில் படுத்து சிறுமி மிரட்டல் விடுத்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன் சிறுமியின், கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியைக் கொலை செய்த ஐய்யப்பன் மீது போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம், கடத்தல் மற்றும் கொலை ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திச் சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு - 4 பேர் கைது