நாகை மாவட்டம் பனங்குடி பகுதியில் செயல்பட்டுவந்த மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் கடந்த ஒரு ஆண்டு காலமாக எண்ணெய் சுத்திகரிப்பை நிறுத்திவைத்திருந்தது.
சிபிசிஎல் விரிவாக்கப் பணிகள் 31 ஆயிரத்து 580 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் வைத்யா கடந்த மாதம் டெல்லியில் அறிவித்தார்.
இந்த நிலையில் 1,300 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு ஒன்பது மில்லியன் மெட்ரிக் அளவிலான எண்ணெய் சுத்திகரிக்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி காணொலி வாயிலாக நேற்று (பிப். 17) தொடங்கிவைத்தார்.
இதில், காணொலி வாயிலாகத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாகை எம்.பி. செல்வராசு, நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் பங்கேற்றனர்.
சிபிசிஎல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டால் 12 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.