நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர் கடந்த 21ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது கோடியக்கரை தென் கிழக்கே 13 நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இரண்டு அதிவேக படகுகளில் வந்த 15 இலங்கை கடல் கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கி அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்தனர்.
பின்னர் படகுகளில் பிடித்துவைத்திருந்த மீன்களைப் பறிக்க முயன்றனர். அப்போது அதனைத் தடுத்த மீனவர்களைக் கூர்மையான தூண்டில் கம்பிகளை உடலில் மாட்டி சித்திரவதை செய்து தண்ணீரில் தள்ளிவிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மீனவர்களின் படகில் இருந்த வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த நாகையைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், கடலில் தத்தளித்த செருதூர் மீனவர்களைக் காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்தனர்.
கடல் கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளான கண்ணன், முருகன் உள்ளிட்ட ஆறு மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த கண்ணன், முருகன் ஆகியோர் நாகை, வேளாங்கண்ணி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
ஏற்கனவே இலங்கைக் கடற்படையினரால் இன்னல்களை அனுபவித்துவரும் மீனவர்கள் தற்போது கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேரளத்தை உத்தரப் பிரதேசம் போல் மாற்றுவோம்- மத்திய அமைச்சர் சதானந்த கவுடா!