மயிலாடுதுறை: காவிரி பாசனப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நீர்வள, நிலவளத் திட்டத்தை ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், நேரடி நெல் விதைப்பு குறித்து, குத்தாலம் தாலுகா நக்கம்பாடி கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அம்பேத்கார் ட்ரோன் மூலமாக பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கும் முறை பற்றி விளக்கம் அளித்தார். குத்தாலம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெற்றிவேல் ஒருங்கிணைந்த உர நிர்வாகம், குறைந்த சாகுபடி செலவு குறித்து விளக்கினார்.
இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம், மண்வளம், நெல்லில் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள், நேரடி நெல் சாகுபடி உழவு தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் விளக்கினர். தொடர்ந்து, உயிர் பூஞ்சானம் கொல்லியான பேசிலஸ் சப்சடலிஷ் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், உழவியல் இணை பேராசிரியர் ராஜூ மற்றும் 50க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பற்றாக்குறையை, ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் முறை நிவர்த்தி செய்யும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காப்பீடு