மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (செப். 21) மின்சாரத் துறை சார்பில் பராமரிப்புப் பணிக்காக பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், சாத்தனூர் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், ஆக்கூர், மடப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என சீர்காழி மின்சார வாரியம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று காலை நிறுத்தப்பட்ட மின்சாரம் மாலை 5 மணிக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மின்சாரத்திற்காக இரவு 8 மணி வரை காத்திருந்த வியாபாரிகளும் தங்களது கடைகளைப் பூட்டிவிட்டுச் சென்றனர்.
பொதுமக்களும் தங்களது வீடுகளில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருள்களை இயக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். அதேபோல் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் முறையாகப் பயில முடியாமல் செல்போன்களில் சார்ஜ் இல்லாமல் மாணவர்கள் தவித்தனர்.
மின் விநியோகம் உரிய நேரத்தில் வழங்காததால் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் மின்சாரம் வழங்க வலியுறுத்தி மின்சாரத் துறைக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இரவு 9 மணி அளவில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நெஞ்சில் ஈரமற்றோரின் கொடுஞ்செயலால் பசுவுக்கு நேர்ந்த துயரம்!