மயிலாடுதுறை மாவட்டம் பொன்னூர் ஊராட்சியில் நகரும் நியாயவிலைக் கடை திறக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர். பிறகு கடந்த மாதம் மக்களின் கோரிக்கையை ஏற்று நகரும் நியாயவிலைக் கடை திறக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால் ஒருசில காரணங்களால் திறக்கப்படாத நிலையில், இன்று(ஜன.13) நகரும் நியாயவிலைக் கடை திறப்பதற்கான டிஜிட்டல் பேனர்கள் அமைச்சர், எம். எல்.ஏ, மாவட்ட செயலாளர்கள் பெயர்களுடன் வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மதியம் 12 மணிவரை நகரும் நியாயவிலைக் கடை திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே இதுகுறித்து தகவலறிந்த குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து விரைவில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்த பிறகு போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை-திருமங்கலம் வழிதடத்தில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.