ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும்போது தகுந்த இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் முக்கிய ஊர்களில் தர்ப்பணம் கொடுப்பதற்காக மக்கள் ஓரிடத்தில் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. அதேபோன்று நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரிக்கரையிலும் தர்ப்பணம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்று காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரி கரை என்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று இங்கே மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு பல்வேறு பகுதியிலிருந்து வருவது வாடிக்கை. இந்துக்களை பொருத்தமட்டில் மூன்று அமாவாசை சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று பித்ருலோகத்திலிருந்து பூமியை நோக்கும் மூதாதையர்கள் வரும் நாள் என்றும், மகாளய அமாவாசை அன்று பித்ருக்கள் பூலோகத்தை அடையும் நாள் எனவும், தை அமாவாசை அன்று மீண்டும் பித்ருலோகம் செல்வதாக ஐதீகம். நேற்று (ஜூலை 21) பித்ருக்கள் பூலோகத்திற்கு வரும் நாள் என்பதால் அவர்களை வரவேற்கும் விதமாக தர்ப்பண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பூம்புகாரில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிவது வாடிக்கை. அங்கே மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதற்கு தடை செய்யப்பட்டுவிட்டது. அதனால் மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரிக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் தர்ப்பண நிகழ்ச்சியில், அதிக அளவில் கூட்டம் கூடியது. தகுந்த இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகரித்திருந்தபோது காவல்துறையினர் அறிவுறுத்தியும் பொதுமக்கள் கேட்கவில்லை. ஏற்கனவே மயிலாடுதுறை பகுதியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் அரசின் அறிவிப்பை மதிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.