மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள உப்பனாறு வடிகால் ஆற்றில் பல்வேறு கிராமங்களில் உள்ள கிளைவாய்கால்கள் வழியாக வரும் உபரிநீர் சேர்ந்து தரங்கம்பாடி கடலில் சென்று கலந்துவருகிறது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மதகுகள் சேதமடைந்துள்ளன.
இதன் வழியாக கடல் சீற்றத்தால் கடல்நீர் மழைக்காலங்களில் உட்புகுந்து வருவதால் விநாயகர்பாளையம், ராமானுஜர்பாளையம் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் மழை வெள்ள காலங்களில் வருடந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் உப்பனாறு மண் கரைகள் கரைந்து வருவதால், மழைக்காலங்களில் வெள்ளநீர் உட்புகுந்து இக்கிராமங்களில் சூழ்ந்துவிடுகிறது. தற்போது குடியிருப்பு பகுதியை நெருங்கி வருவதாகவும், உப்பனாற்றால் நிலத்தடி நீர், குடிநீர், உப்பு நீராக மாறிவிடுவதோடு, விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் கடல்நீர் உட்புகுவதால், இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் உப்பனாற்றின் கரைகளை உயர்த்தி நிரந்தர கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.