மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் விதமாக, தரங்கம்பாடி கடற்கரை உள்ளது. கடந்த 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை, ஆளுநர் மாளிகை, பழமையான தேவாலயங்கள் உள்ளடக்கிய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாகும். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாசிலாமணி நாதர் கோயில் கடற்கரையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் ஓசோன் காற்று அதிகம் வீசும் கடற்கரை நகரமாக விளங்குகிறது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இப்பகுதியில் அதிகமாக காற்று வீசுகிறது. கடந்த 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை உள்ளது.
இங்கு கீழ்தளத்தில் கிடங்குகள், வீரர்கள் தங்கும் அரை, மேல்தளத்தில் தொல்லியல் துறையின் பழங்கால பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தரங்கம்பாடி கடற்கரை நகரத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.
மேலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் இந்த கடற்கரைக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து டேனிஷ் கோட்டை மற்றும் ஆளுநர் மாளிகையை பார்வையிட்டும், கடற்கரையில் குளித்துவிட்டு செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்தும் செல்வார்கள்.
இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தரங்கம்பாடி கடற்கரைக்கு வருகை தந்தனர். டேனிஷ் கோட்டை, அருங்காட்சியகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை குடும்பதினருடன் சுற்றி பார்த்து கடற்கரை மணலில் அமர்ந்து குடும்பத்தினருடன் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை கொண்டாடி நேரத்தை செலவிட்டனர். சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடற்கரை அழகாக ஜொலித்தது.
இதையும் படிங்க: சாலையில் சொகுசு காரில் அதிவேகமாகச் சென்று விபத்து: பாஜக எம்எல்ஏ-வின் மகன் கைது!