மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பக்தர்களுக்கு இக்கோயில் குலதெய்வமாக உள்ளது. அதேபோல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருக்கு இக்கோயில் குலதெய்வக்கோயிலாகும்.
சிதிலமடைந்த இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கோயிலை புனரமைத்து துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவடைந்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வெகு விமரிசையாக யாகசாலை பூஜை நடைபெற்று வந்தது.
நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூரணாஹுதி செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. புனித நீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது. துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலினின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோயிலை வலம் வந்தனர்.
பின்னர் கோயில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சந்நிதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக்கொடியை அசைத்துக்காட்டிட, புனித நீர் சிவாச்சாரியார்களால் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் , மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இன்று மயிலாடுதுறை அருகேயுள்ள கோழிகுத்தியில் உள்ள 2ஆயிரம் ஆண்டுகள் பழமையான வானமுட்டி பெருமாள் ஆலயத்திற்கு துர்கா ஸ்டாலின் திடீரென்று வந்து சுவாமி தரிசனம் செய்தார். இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வருகின்ற 9ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், துர்கா ஸ்டாலின் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் யாகசாலையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
தொடர்ந்து தரிசனம் முடித்த பின்னர் அவர் திருவாரூருக்கு சாலை வழியாக புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க:ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீதான மூன்று வழக்குகள் ரத்து!