மயிலாடுதுறை : கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கசாமி(85), சாரதாம்பாள்(75) தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு தனது நான்கு மகன்களுக்கும் தலா நான்கு மா விவசாய நிலத்தையும், குடியிருக்க மனையையும் பிரித்து தங்கசாமி சொத்து எழுதி தந்துள்ளார்.
மேலும் தனக்கென நான்கு மா நிலத்தையும், ஒரு குடிசை வீட்டையும் வைத்துக்கொண்ட தங்கசாமி அதில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிவரும் தங்கசாமியின் மூத்தமகன் உத்திராபதி தந்தையை ஏமாற்றி அவரிடம் இருந்த சொத்துக்களையும் தனது பெயரில் மாற்றி எழுதிக்கொண்டுள்ளார்.
பெற்றோரை அடித்து விரட்டிய மகன்
அதன்பின்னர், பெற்றோரை அவர்கள் இருந்த வீட்டில் இருந்து அடித்து விரட்டியுள்ளார். இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உத்திராபதி பொருட்படுத்தாமல் தனது பெற்றோரை தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
தங்கசாமி தனது சொத்துக்களை பெரிய மகனுக்கு மட்டும் எழுதி தந்துவிட்டதால் அவரை பராமரிக்க மற்ற மகன்களும் மறுத்துவிட்டனர். இதையடுத்து தம்பதியினர் இருவரும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலேயே தங்கி தங்களது முதுமைக் காலத்தை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த தங்கசாமி, தனது நிலத்தை அபகரித்து வாங்கிக்கொண்டு, துன்புறுத்தும் தனது மூத்த மகன் மீது நடவடிக்கை எடுத்து, தனது சொத்தினை மீட்டுத்தருமாறு புகார் மனு அளித்தார்.
கண்ணீர்மல்க கோரிக்கை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய தங்கசாமி, ”சீர்காழி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தனது மூத்தமகன் உத்திராபதி, கடந்த 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி தனது மனைவிக்கு உணவில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்து அவருக்கு மயக்கமும், வாந்தியும் ஏற்பட்ட நிலையில் அவரை 30 கிலோமீட்டர் அப்பால் உள்ள சீர்காழி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அவர் பிழைக்கமாட்டார் என்று கூறி சாரதாம்பாள் பெயரில் இருந்த நிலத்தையும், வீட்டினையும் செட்டில்மென்ட் ஆவணம் எழுதி ஏமாற்றினர். அரசுப்பணியில் இருந்து பெற்றோரை தவிக்க வைத்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு