மயிலாடுதுறை மாவட்டம், இளையாளுர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் சுக்ரியா பர்வீன். அதிமுகவைச் சேர்ந்த சுக்ரியா பர்வீனுக்குப் பதிலாக அவரது கணவர் தமிமுல் அன்சாரி என்பவர் ஊராட்சிப் பணிகள் அனைத்தையும் செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்த ஊராட்சியில் துணைத்தலைவராக இருப்பவர் சம்சுதீன். இவர் திமுகவைச் சேர்ந்தவர். இச்சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்பு புதியதாக ஊராட்சி வரவேற்புப் பெயர் பலகை அமைக்கப்பட்டது. இதில் துணைத் தலைவர் சம்சுதீன் பெயர் இல்லை. பெயர் பலகையில் துணைத் தலைவர் பெயரை எழுதாதது ஏன்? என திமுக கட்சி உறுப்பினர் ஜெகபர் யூசுப் என்பவர் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதைக்கண்ட தமிமுல் அன்சாரி கோபமடைந்து, பட்டப் பகலிலேயே ஜெகபர் யூசுப் வீட்டிற்குள் புகுந்து, அவரைத் தாக்கி, கொலை மிரட்டல்விடுத்து வெளியில் சென்றவர், மீண்டும் மதில் சுவர் ஓரம் நின்றிருந்த ஜெகபர் யூசுப்பை எட்டி அடித்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்தக் காட்சியை சம்சுதின் வீட்டில் இருந்தவர்கள் கைப்பேசியில் படம்பிடிக்க, அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இது குறித்து செம்பனார்கோவில் காவல் துறையினர் தமிமுல் அன்சாரி மீது கொலை மிரட்டல், வீடுபுகுந்து தாக்குதல் போன்ற நான்கு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவாகியுள்ள அவரைத் தேடிவருகின்றனர்.