நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலுகா பழைய கூடலூர் ஊராட்சி சார்பில் கிராமப்புற பகுதிகளில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள், அஞ்சல் பணியாளர்கள், நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஆகியோரை கௌரவித்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பழைய கூடலூர் ஊராட்சித் தலைவர் ரா.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வரும் நிலையில், கிராமப்புறங்களில் அர்ப்பணிப்போடு பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி, சந்தனமாலை அணிவித்து அவர்களுக்கு ஆடை, அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் பணியினை பாராட்டி கௌரவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பழைய கூடலூர் ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பதற்கு உதவிடும் வகையில் ஊராட்சித் தலைவர் புதிய கிருமி நாசினி தெளிக்கும் கருவியை தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார்.
பழைய கூடலூர் ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் அதிகாரிகளின் உதவியுடன் முழுவீச்சில் செய்து வருவதாகவும் மேலும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி விழிப்போடு இருக்கவேண்டும் ரா.பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்!