மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டமும் வேட்பாளர் அறிமுக கூட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மக்களின் மனத்தை வென்றவர்; தலைசிறந்த மனிதாபிமானமிக்க முதலமைச்சர் என்ற பெயரெடுத்தவர்; ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்தவர்; வரலாறு படைத்தவர்; மாணவர்களின் செல்வாக்கைப் பெற்றவர்; 17 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்து சாதனை படைத்தவர்; ஆறு தனி மாவட்டங்களை உருவாக்கியவர். இப்படி துறைதோறும் சாதனை படைத்த அவர்தான் இந்த நாட்டின் முதமைச்சராக வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கபடும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஜெயலலிதா மரணத்திற்கு கருணாநிதியும், அன்பழகனும்தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டினார். மேலும் பேசிய அவர், "ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் அதிமுக வென்று சிக்சர் அடிப்போம்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். பவுன்ராஜ், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினரும் வேட்பாளருமான பி.வி. பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.