நாகப்பட்டினம்: தேவாரப் பதிகங்கள் பாடம் பெற்ற 275 சிவாலயங்கள் இந்தியாவில் அமைந்துள்ளது. அவற்றில் கேதார்நாத் உள்ளிட்ட ஐந்து சிவாலயங்கள் வடநாட்டில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீன மடத்தின் சார்பில் இமயமலையில் 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயத்தில் நேற்று முன்தினம் (அக். 13) 100 சிவாச்சாரியார்களைக் கொண்டு ருத்ர ஹோமம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கேதார்நாத் ஆலயம் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்கள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வெட்டுகளாக கேதார்நாத் ஆலயத்தில் பொறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தருமபுர ஆதீன 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் கட்டளை தம்புரான சுவாமிகள் பங்கேற்றனர்.
சென்னையில் இருந்து கேதார்நாத் சென்று மீண்டும் 20 மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று (அக்.15) மடத்தின் பூஜா மூர்த்தி சொக்கநாத பெருமானுடன் தருமபுர ஆதீன மடாதிபதி மடத்திற்கு திரும்பினார். தொடர்ந்து பூஜா மூர்த்தியை மடத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மடாதிபதியின் ஞான கொலு காட்சியும் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமை ஆதீன குரு மகா சன்னிதானம், “இந்த கல்வெட்டுகளை கேதார்நாத் ஆலயத்தில் பதிக்கும் நிகழ்ச்சி மூலம் நமது தமிழ் தேவாரப் பாடல்களின் பெருமையை வட மாநில பக்தர்கள் தெரிந்து கொள்வார்கள்” என்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் சஷ்டி விரதம்.. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு...