தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க இன்று (மே.24) முதல் ஒரு வாரத்துக்கு அரசு தளர்வுகளற்ற பொது ஊரடங்கை அறிவித்துள்ளது. அந்த வகையில், திருமணம் உள்ளிட்ட விழாக்களை நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்டப் பகுதியில் சுமார் 50 திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த, மண்டபங்களில் திருமணம் நடத்தக்கூடாது என்று திருமணக்கூட உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான திருமண மண்டபங்களில் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டபடி திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (மே.23) நள்ளிரவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண மண்டபங்களுக்கு திடீரென வந்த நகராட்சி ஆணையர் சுப்பையா தலைமையிலான அலுவலர்கள் உடனடியாக மண்டபத்தைவிட்டு வெளியேறக்கூறி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
பொதுஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நள்ளிரவில் திருமணவீட்டார் மண்டபத்தை விட்டு வலுக்கட்டமாக வெளியேற்றப்பட்டனர். அதேசமயம், நகரில் உள்ள சில திருமண மண்பங்களில் அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் ஏற்பாடு செய்திருந்த திருமணங்களை நடத்துவதற்கு மட்டும் நகராட்சி அலுவலர்கள் அனுமதி அளித்திருந்தது மிகவும் அதிர்ச்சியளித்தது.
இந்த மாதம் 10ஆம் தேதி பொதுஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் கோயில்களைத் திறக்க அரசு அனுமதி மறுத்துள்ளது.
ஆனால், மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து, தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் விரைந்து வந்து கோயில் நிர்வாகத்தினரை எச்சரித்துச் சென்றனர்.
மொத்தத்தில் பணபலம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமாகவும், சாமானிய ஏழை மக்களுக்கு ஒரு சட்டமாகவும் நகராட்சி அலுவலர்கள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.