மயிலாடுதுறை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேலபாதி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார்(47).
இவரும் இவரது மனைவி கோமதி, மகள் சந்தியா, மகன் சரவணன் ஆகிய நான்கு பேரும் காரில் திருநள்ளாறு சென்று விட்டு திரும்பியுள்ளனர்.
அப்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காருகுடி கிராமத்தின் வழியே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சசிக்குமார் காரை ஒதுக்கியுள்ளார்.
அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த கீழ சாலை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் (64), காருகுடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (45) ஆகியோர் மீது மோதிவிட்டு அருகில் இருந்த ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் சுந்தரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மகாலிங்கம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் கொண்டு செல்லப்பட்டார்.
உடனே ஆற்றில் கவிழ்ந்த காரைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து காரினுள் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன்கோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு விருந்துக்கு ஆடு திருடிய சப்-இன்ஸ்பெக்டர் கைது!