மயிலாடுதுறை: தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து வணிக நிறுவனங்களிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதனால் மயிலாடுதுறை கடைத்தெருவில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கரோனா விதிமுறைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தினார்.
இந்நிலையில், பெரும்பாலான கடைகளில் அரசு அறிவித்திய கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை நடைபெற்று வருவதாக நகராட்சி அலுவர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் மலர்மன்னன் தலைமையில் நகராட்சி துறை அலுவலர்கள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாத ஜி.ஆர்.டி நகைகடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திய சான்று இல்லாதது, முககவசம் அணியாதது உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை பின்பற்றாத திருப்பூர் காட்டன் என்ற ஜவுளி கடைக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.
வியாபாரிகள் கண்டனம்
இதையடுத்து அருகே உள்ள சீமாட்டி ஜவுளிக் கடைக்கு ஆய்வுக்கு சென்ற போது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கரோனா விதிமுறையை பின்பற்றாததால் கடைக்கு சீல்வைக்க நகர்நல அலுவலர் மலர்மன்னன் உத்தரவிட்டார்.
இதனால் கடை உரிமையாளருக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் கடைக்கு சீல் வைக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது கடை உரிமையாளரும், அவரது உறவினர்களும் நகர்நல அலுவலர் மலர்கண்ணனை தள்ளிவிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நகராட்சி ஆணையர் பாலு, மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இன்று ஒருநாள் மட்டும் கடை மூடப்படும் என்றும் நாளை முதல் கரோனா விதிமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் கடைக்கு தீபாவளி பண்டிகை வரை சீல் வைக்கப்படும் என எச்சரித்து 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துச் சென்றனர்.
பிரபல ஜவுளிக் கடை என்றால் அபராதம் மட்டும் விதித்து விட்டு செல்வது, சிறிய கடை என்றால் சீல் வைக்கும் நகராட்சி அலுவலர்களுக்கு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு எதிராக 18 மாதங்கள் வரை பாதுகாக்கும் புதிய மருந்து!