மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கஜேந்திரன் இல்ல மணவிழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, மணமக்கள் ரஞ்சித் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் திருமணத்தை மாங்கல்யம் எடுத்துக்கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முன்னதாக ஏராளமான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு குத்தாலம் கடைவீதியில் செண்டை மேளம் முழங்க திறந்த வாகனத்தில் பட்டாசுகள் வெடித்து, ஊர்வலமாக திருமண மண்டபம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருமணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸிடம் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை மாபெரும் வெற்றி அடைய செய்வேன் என்று வி.கே.சசிகலா கூறி இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, 'இதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'சாதாரணத் தொண்டர்கள்கூட கழகத்தின் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால், அவர்கள் கழக விதியை மாற்றி 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிந்து 10 மாவட்டச் செயலாளர் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம் என்று விதிகளை மாற்றி அமைத்திருக்கின்றனர்’ என குற்றம்சாட்டினார்.
'எனவே தான், இதை செய்யக்கூடாது. கட்சியில் அடிமட்ட தொண்டர்கள் ஆதரவுடன் 50 ஆண்டுகாலம் முழுமையாக தமிழ்நாட்டை வழிநடத்தி ஆட்சி புரிந்த கட்சி அதிமுக' என்ற நிலையில் உள்ளதாகவும் கூறினார். அதன்படி அம்மாவும், புரட்சித்தலைவரும் உருவாக்கியதைத்தான் தாங்களும் வலியுறுத்துகிறோம் என்றார்.
'அதிமுக சட்ட விதிப்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும், ஏற்கனவே பழைய உறுப்பினர்களை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட வேண்டும்; அவற்றை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் கொடுக்கப்பட்ட பிறகு கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கெல்லாம் உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் களைகட்டும் புத்தகத்திருவிழா..விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தொடங்கிவைப்பு!
’அவ்வாறு உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டவர்களுக்கு எல்லாம் அவர்களை வைத்து தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அப்படி செய்தால் உறுதியாக, கீழ் மட்டத்தொண்டர்கள்கூட தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைதான் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து அம்மா காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டது. அதை மாற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா தாக்கலின் போது, அதிமுகவின் சார்பில் தளவாய் சுந்தரம் இம்மாதிரியான விவகாரங்களில் மாநில உரிமைகளில் தலையிட ஆளுநருக்கு உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியதாக சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மேலும், இதனை அதிமுக முழுமனதுடன் வரவேற்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் பேசிய போது, அவரும் இந்த ஆன்லைன் தடை சட்ட மசோதாவை வரவேற்பதாகப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "தனி மனிதனை கண்டு பெரும்பான்மை அஞ்சுகிறதா?" - துரைமுருகன் கேள்வி!