மயிலாடுதுறை: கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு, வருகின்ற நவம்பர் 16 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 25-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கபட்டுள்ளது.
மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் தனது பாவங்கள் நீங்குவதற்கு.
மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது. இதேபோன்று சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை.
அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள்.
சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம்.
இதற்காக ஐப்பசி மாதம் கடைசி நாளன்று கடைமுக தீர்த்தவாரி நிகழ்ச்சி காவிரியில் நடைபெறும் இதனையொட்டி, பாடல்பெற்ற மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், படித்துறை விஸ்வநாதர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம், புனுகீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி கடைமுக தீர்த்தவாரி வருகின்ற நவம்பர் 16 -ம் தேதி நடைபெறுகின்றது. புகழ்பெற்ற இந்த உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். ஆகையால் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு, வருகின்ற நவம்பர் 16 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
அதனை ஈடுகட்ட நவம்பர் 25-ம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார். 16 - ம் தேதி கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!