தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி ஒன்று பரவியது.
இது குறித்து மயிலாடுதுறை தலைமை மருத்துவர் ராஜசேகர் கூறுகையில், "மயிலாடுதுறையில் ஒருவர் மட்டும் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்படவில்லை. பொதுமக்கள் யாரும் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம். ஏதேனும் கரோனா தொற்று பாதிப்புள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சார்பில் செய்தி வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களுக்கு இருமல், தும்மல், சளி அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: டெல்லி சென்று வந்தவர்களில் 50 பேருக்கு கரோனா - பீலா ராஜேஷ்