நாகை : பாப்பாகோயில் வழியாக கடலுக்கு வடிகாலாக செல்லும் ஓடம்போக்கியாறு மற்றும் கடுவை ஆற்றில் நீர் ஓட்டத்தை தடுக்கும் விதமாக தடை செய்யப்பட்ட கொடாப்பு என்னும் தடுப்பு வலை கட்டி, சிலர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
இதனால் ஆகாயத் தாமரை, செடி, கொடிகள் வலையில் முன்பு அடைத்துக் கொண்டு நீரோட்டம் தடுக்கப்பட்டு
அவ்வப்போது பெய்யும் கன மழையில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டு, இப்பகுதியிலுள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலப்பகுதிகளில் தண்ணீர் உட்புகுவதால் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மேலும், இப்பகுதிகளில் உள்நாட்டு மீனவர்கள் எனப்படும் கிராமப்புறத் தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி கையால் தடவி, இறால் மற்றும் வலைவீசி மீன் பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஆற்றில் இறங்கக்கூடாது என வலை கட்டி மீன்பிடித் தொழில் செய்பவர்கள் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.
வலை கட்டி மீன்பிடித் தொழில் செய்பவர்களால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளதாகக்கூறி பக்கிரிசாமி என்பவர் கடந்த மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மனு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்ததைத் தொடர்ந்து அச்சத்தில் உள்ள கிராம மக்கள் அங்கு உள்ள ஆற்றில் இறங்கி உடனடியாக தடுப்புகளை அகற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜிடம் கேட்டபோது, வரும் திங்கட்கிழமை அன்று இருதரப்பினர் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அன்று வலைகளும் அகற்றப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : கள்ளக்குறிச்சி ஜல்லிக்கட்டில் கட்டுக்கடங்காத காளைகள்!