வேதாரண்யத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை நிறுவ வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாநிலம் முழுவதும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இச்சூழலில் புதிய அம்பேத்கர் சிலையை தமிழ்நாடு அரசு அதே இடத்தில் வைப்பதற்காக முடிவெடுத்தது.
இதனையடுத்து, இன்று காலை சேலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 6 அடி உயரம் உள்ள புதிய அம்பேத்கர் சிலையை ஐ ஜி வரதராஜுலு , டிஐஜி லோகநாதன் பார்வையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது.
வேதாரண்யத்தில் அம்பேத்கரின் புதிய சிலை அமைக்கப்பட்டதால் தற்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி பதற்றம் தணிந்து இயல்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட அம்பேத்கர் சிலை 15 மணி நேரத்துக்குள் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டு சுமூக நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கலவரக்காரர்கள் 50 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரு தரப்பைச் சேர்ந்த 28 பேர் மீது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக திருச்சி மண்டல டிஐஜி லோகநாதன் கூறுகையில், "பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரு தரப்பைச் சேர்ந்த 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்