கடைமடை பகுதியான நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் இந்தாண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி நேரடி விதைப்பு நடவு பணியை மேற்கொண்டனர். தற்போது சீர்காழி, கொள்ளிடம், மகேந்திரப்பள்ளி, மாதானம், எடமணல், திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டாரம் முழுவதும் தண்ணீரின்றி வயல்கள் வெடித்து, முளைத்த நெற்பயிர்கள் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் கருகும் நிலையில் உள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது 118 கனஅடி தண்ணீர் இருந்தும் பாசனத்திற்கு விடாமல் பொதுப்பணித்துறையினர் விவசாயத்தை அழிக்கும் நோக்கோடு செயல்படுதாகவும், வருடா வருடம் இதே போல விவசாயத்திற்கு செல்ல வேண்டிய தண்ணீர் செல்லாமல், கொள்ளிடம் ஆற்றில் வீணாக திறந்துவிட்டு டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன், கெயில், ஒஎன்ஜிசி உள்ளிட்ட அழிவுத்திட்டங்களை பாதுகாக்கின்றனர் என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விவசாயத்திற்கு தண்ணீரை விடாமல் வறட்சியை காரணம் காட்டி விவசாயத்தை அழிக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிடுவதாகவும், ஒருமாத காலமாகியும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து சேர்ந்தும், விவசாயத்திற்க்கு பயன்படாமல் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீராக 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். மேலும் புல், புதர்கள் உருவாகியிருக்கும் கிளை வாய்கால்களை தூர்வாரும் பணி தற்போதுவரை நடைபெற்றுவருவதால் ஆற்றின் குறுக்கே மணல் போட்டு தண்ணீர் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளது.
சீர்காழி தாலுகாவில் தண்ணீர் முழுமையாக கடைமடைக்கு வரவில்லையெனவும், கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற விரைந்து பாசனத்திற்க்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் கடைமடை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறு தேயிலை விவசாயிகளுக்கு புதிய மொபைல் செயலி அறிமுகம்!