நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த இளையமதுகூடம் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்லப்பா. இயற்கை விவாசாயம் மீது ஆர்வம் கொண்ட இவர், செயற்கை உரங்களை தவிர்த்து தனது விவாசாயத்தை தொடர்ந்து வருகிறார். தற்போதுள்ள சூழலில் நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்துவரும் இவர், நேர விரயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சீர்காழி அரசு தோட்டக்கலை துறையை நாடினார்.
அங்குள்ள அலுவலர்கள் செல்லப்பாவிற்கு, மானியத்துடன் கிடைக்கும் சொட்டுநீர்ப்பாசன அமைப்பு குறித்து எடுத்துரைத்துள்ளனர். பின் தனது தோட்டத்தில் சொட்டுநீர்ப்பாசனத்தை நிரப்பி செல்லப்பா, குறுகிய கால பயிர்களான வெண்டை, கத்திரி, அவரை, பாகற்காய் உள்ளிட்டவைகளை பயிரிட்டார்.
சொட்டுநீர்ப்பாசனத்தின் மூலம் தற்போது பயிர்கள் அனைத்தும் அறுவடை பருவத்தை எட்டியதுடன், நல்ல மகசூலையும் கொடுத்துள்ளதாகவும், குறைந்த செலவில் பயிரிட்டு தற்போது நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் விவசாயி செல்லப்பா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றியுள்ள வயல்கள் வறட்சியால் காய்ந்து கிடக்கும் நிலையில், சொட்டுநீர்ப்பாசனம் மூலம் அதிக மகசூலையும் பெற்று சாதித்த விவசாயிக்கு, சீர்காழி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:திருவள்ளூரில் 39 ஏரிகளின் குடிமராமத்து பணி தொடக்கம்!