நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் நீடு அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் மே 1ஆம் தேதி தமிழ்நாடு குத்துச்சண்டைக் கழகத்தால் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான ஆண்டுப்போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து, மே 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் புதுக்கோட்டையில் தமிழ்நாடு குத்துச்சண்டைக் கழகம் நடத்திய மாநில அளவிலான ஆண்டுப் போட்டியில் இந்த பள்ளியின் மாணவி தனலெட்சுமி, 54 முதல் 57 கிலோ எடை பிரிவினருக்கான போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கமும், மாணவி வெண்ணிலா, 36 முதல் 38 எடை பிரிவினருக்கான போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியின் முடிவில், பதக்கம் வென்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோரை மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார். மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் பிற நரிக்குறவ மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் மாணவிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: கோவில்பட்டி கூலித்தொழிலாளியின் மகன் ஆசிய ஹாக்கி போட்டிக்குத் தேர்வு!