நாகப்பட்டினம்: நாகூரில் உலகப்புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான, நாகூர் தர்காவை 8 பேர் கொண்ட பரம்பரை அறங்காவலர்கள் குழு நூற்றாண்டுகளாக நிர்வகித்து வந்தனர்.
இந்நிலையில் 8 அறங்காவலர்களில் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த காரணத்தால், மற்ற நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பனிப்போர் காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி தர்கா நிர்வாகத்தை ஓய்வு பெற்ற ஆட்சியர் மற்றும் நீதிபதி ஆகிய இருவர் நிர்வகித்து வந்தனர்.
இந்நிலையில் ஊழல் புகாரால் இடைக்கால நிர்வாகிகளை நீதிமன்றம் நீக்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகிகள் சில மாதங்கள் தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு, நாகூர் தர்கா நிர்வாகத்தைப் பாரம்பரிய முறைப்படி, அறங்காவலர்கள் நிர்வகிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின், 11 அறங்காவலர்களை நீதிமன்றம் நியமித்த நிலையில், 8 பரம்பரை அறங்காவலர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு, மூத்த அறங்காவலர் தேர்வு இன்று (ஏப்.18) நாகூர் தர்காவில் நடைபெற்றது. அப்போது, நாகூர் தர்கா தலைமை அறங்காவலாராக , நாகூர் ஆண்டவரின் 10ஆம் தலைமுறையாக இருக்கும் செய்யது காமில் சாஹிப் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு அறங்காவலர்கள், சாஹிபுமார்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 5 ஆண்டுகளுக்குப்பிறகு, உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்கா பாரம்பரிய முறைப்படி அறங்காவலர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இதையும் படிங்க: நூற்றாண்டுகள் பழமையான கோயில்களை இடிக்கத் தடை