நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து நாகை கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறையினர் கீச்சாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரது வீட்டில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 டன் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறை வருவதை அறிந்த ராமதாஸ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகள் நாகையிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது.
நாகை துறைமுக பகுதியில் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: போலி அழைப்புதவி மையம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி: கும்பல் கைது