நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த கட வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சௌந்தரராஜன்(60) - ராசையாள் (55) தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து, தனது சொத்தை இரண்டு மகன்கள், மகளுக்கு பிரித்துக் கொடுத்த சௌந்தரராஜன், வெளிநாட்டிலுள்ள மற்றொரு மகன் பாலமுருகனின் சொத்தை மட்டும் பிரித்து கொடுக்காமல் அவரது பொறுப்பிலேயே வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகனின் மனைவி கீதா (32), தனது தந்தை ஜெயராமன், உறவினர்களை அழைத்து சென்று மாமனார் சௌந்தரராஜனின் சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கீதா மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதில் சௌவுந்தரராஜனுக்கு காலிலும், அவரது மனைவி ராசையாளுக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த புதுபட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.