நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 79 லிட்டர் பாண்டி சாராயம், 695 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், “நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டில் கடந்த 12 மாதங்களில் மட்டும் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 44 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கஞ்சா வழக்கில் 116 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 695 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மணல் கடத்தலில் 19 பேர் கைது: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 லட்சத்து 58 ஆயிரத்து 79 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாரயம், 17 ஆயிரத்து 373 வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 ஆயிரத்து 899 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 15 கார், 13 ஆட்டோ, 292 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டு விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 589 நபர்களும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 13 டிராக்டர்கள், 3 ஜேசிபி இயந்திரங்கள், ஒரு டிப்பர் லாரி, 1 மினி வேன், 4 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விபச்சார வழக்கில் 13 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 500 போலீசார்: விதியை மீறி வாகனங்கள் இயக்கியது தொடர்பாக 67 ஆயிரத்து 283 வழக்குகள் பதியப்பட்டு, 63 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அபாரதம் பெறப்பட்டு உள்ளது” என்று கூறினார். இதனை தொடர்ந்து 2024 ஆங்கிலப் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், “ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 500க்கும் அதிகமான போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடலோரப் பகுதியில் போலீசார்: அனைத்து போலீசாரும் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாராயம் கடத்தலைத் தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், வேளாங்கண்ணி பேராலயத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால், அந்த பகுதியை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, 250க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, கடலோரக் காவல் குழும போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போட்டோ எடுத்து அனுப்ப உத்தரவு: குற்றத்தடுப்புச் சம்பவங்களை கண்காணிக்க குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் நவீன கருவிகளுடன் வேளாங்கண்ணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் காவலர்கள் ரோந்து வாகனங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதுடன், எந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுகிறோம் என்பதை தெரிவிக்க, ரோந்து பணியில் இருக்கும் இடத்தில் இருந்து போட்டோ எடுத்து அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் ரோந்துப் பணியில் கட்டாயம் போலீசார் இருப்பார்கள். நாகப்பட்டினம் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களைத் தணிக்கை செய்து அனுப்புவார்கள்.
போலீசார் சார்பில் விழிப்புணர்வு: வேளாங்கண்ணி அருகே பரவை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வேளாங்கண்ணிக்கு வரும் வாகனங்கள் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சந்தேகப்படும்படி சுற்றித் திரிபவர்களை பொதுமக்கள் பார்த்தால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது உங்கள் எஸ்.பியுடன் பேசுங்கள் 8428103090 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.
இதையும் படிங்க: நாகை போலீசாரின் அதிரடி ஸ்ட்ராமிங் ஆபரேஷன்.. ஒரே நாளில் 85 நபர்கள் அதிரடி கைது!