மேட்டூரிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுவதையடுத்து, வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் ஆற்றில் நீச்சல் அடிப்பதோ, மீன்பிடிப்பதோ கூடாது என்றும் நீர்நிலைகளின் அருகில் நின்றவாறு கைப்பேசியில் செல்ஃபி, புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார். பெற்றோர் குழந்தைகளை ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாதவாறு கவனித்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் சலவைத் தொழிலாளர்கள் நீர்நிலைகளில் பாதுகாப்பாக சலவை செய்திட வேண்டும் எனவும், விவசாயிகள் கால்நடைகளை நீர்நிலைகள் வழியே கடந்து செல்லும்போது கவனமாக செல்லுமாறும் ஆட்சியர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.