வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, தேவங்குடி, கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி, திருக்குவளை, செருதூர் உள்ளிட்ட பகுதிகளீல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் தருணத்தில் பெய்து வரும் இந்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை விவசாயிகள் வேதனையடைந்துள்ளது.
இதனிடையே தொடர்மழையின் காரணமாக இன்று(02.02.2023) நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.